Wednesday, February 2, 2011

தி.மு.கவை தோற்கடித்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்! சோ.தி.மு.கவை தோற்கடித்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்!
சோ கணிப்பு

துக்ளக்பத்திரிகை ஆசிரியர், நடுநிலை அரசியல் விமர்சகர் மற்றும் சினிமா நடிகர் என பன்முகத்தன்மை வாய்ந்த சோவை சந்திப்பதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது பத்திரிகை அலுவலத்துக்கு சென்றோம். சிறிது நேரத்துக்குப்பின், அலுவலக முதல் மாடியில் உள்ள அவரது பர்சனல் அறைக்குள் போனோம். சிரித்த முகத்துடன் வரவேற்றார் சோ. அமைதியாகக் காட்சி அளித்த அந்த அறையில், காஞ்சி பெரியவரின் மெகா படம் உட்பட பல சாமி படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகளால் வீசிய தெய்வீக மணத்துக்கு நடுவில், சூரிய கதிருக்காக அவர் மனம் திறந்து பேசத்துவங்கினார்.
‘‘2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எப்படி பார்க்கிறீர்கள்?’’
‘‘இந்தியாவிலேயே.. ஏன்? உலகத்திலேயே இது மிகப்பெரிய ஊழல். இதில் நிறைய ஜிக்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால், பிரதானஜிக்கள் இருவர் தான். ஒருவர் சோனியா மற்றொருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளிவர கூட்டுக்குழு விசாரணை தேவை. இதற்கு பிரதமர் ஒத்துழைக்காததால், அவரது நேர்மையையும் இப்போது சந்தேகப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சோனியா மிகப்பெரிய உத்தமர் அல்ல. அவரது பங்கு ஸ்பெக்ட்ரமில் அதிகமாக இருக்கிறது. அதை வைத்துத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி சோனியாவை மிரட்டுகிறார்’’
‘‘வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க & காங்கிரஸ் கூட்டணி தொடருமா?’’
‘‘கண்டிப்பாகத் தொடரும். இந்த இரு கட்சியும் மத்தியில் அடித்த கொள்ளையை மறைக்க கூட்டணி தொடரும். இருவருக்கும் வேறு வழி இல்லை.’’
‘‘துணை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்களே?’’
‘‘ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் அழகிரியை சமாளிப்பதற்கே நேரம் போதவில்லை. அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? அவர் சொல்லக்கூடிய புள்ளிவிவரங்கள் தவறாக இருக்கின்றன. அழகிரியை சமாளிக்கவே அவருக்கு மூச்சு முட்டுவதாக எனக்கு தகவல்கள் வருகிறது. எனவே ஸ்டாலினை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் குடும்பப் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்’’
‘‘தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக, கூறப்படுவது உண்மையா?’’
‘‘முதல்வர் கருணாநிதி எந்த திட்டத்தைத் துவங்கினாலும் அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்வதில் கெட்டிக்காரர். அவர் செயல்படுத்திய இலவச டி.வி திட்டம் உட்பட எல்லா திட்டங்களும் தி.மு.க.வினருக்குதான் பயன் தருகின்றது. இலவசங்களை கொடுத்து மக்களை தவறான பாதைக்கு கருணாநிதி அழைத்துச் செல்கிறார். வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு நிலை கிடையாது.’’
‘‘தி.மு.க. ஆட்சியை மாற்ற என்ன வழி?’’
‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபொழுது, ‘ஜன நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திராவைத் தோற்கடிக்க வேண்டும்என்ற உணர்வு இருந்தது. அதே நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. தி.மு.க.வை தோற்கடித்தால்தான் தமிழகத்தையே காப்பாற்ற முடியும். அது தமிழர்கள் கையில் உள்ளது’’
‘‘அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்த என்ன செய்யலாம்?’’
‘‘அ.தி.மு.க அணியில் இப்போது உள்ள கட்சிகளே போதும் என ஜெயலலிதா நினைக்கக்கூடாது. கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணி அமைய வேண்டும். தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும்.’’
‘‘விஜயகாந்த் தனித்து நிற்க வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது. தி.மு.க.வை தோற்கடிக்கும் கடமையில் இருந்து அவர் தவறக் கூடாது. எனவே அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது காலத்தின் கட்டாயம்.’’
‘‘விஜயகாந்தை தனித்து நிற்க வைக்க தி.மு.க விலை பேசுகிறது என்கிறார்களே?’’
‘‘நான் அப்படி நினைக்கவில்லை. விஜயகாந்த் விலை போகிறவராக இருந்தால் அவரது திருமண மண்டபத்தை இடித்திருக்க மாட் டார்கள். ரெய்டுஎன்ற பெயரில் அவருக்கு அடுக்கடுக்கான சோதனைகளை கொடுத்திருக்க மாட்டார்கள். தி.மு.க. நினைத்தால் தமிழகத்தையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கிறது. அதனால் தான் ஓட்டுக்கு பணம் கலாச்சாரத்தை அவர்கள் அமல்படுத்தியிருக்கிறார்கள்’’
‘‘தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?’’
‘‘தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம். திரைப்படத்துறை முதல்வர் குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தயவு இல்லாமல் எந்த படத்தையும் திரையிட முடியாது. ரியல் எஸ்டேட் துறையையும் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பத்திற்கு எல்லாவற்றையும் எழுதிக் கொடுக்க வேண்டியதுதான் மிச்சம்’’
‘‘ ‘முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லைஎன சமீபத்தில் கருணாநிதி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’’
‘‘அவர் அதை மக்களுக்காக சொல்லவில்லை. தனது மக்களை நினைத்து சொல்லியிருக்கிறார். அழகிரியை எச்சரிக்கை செய்யவும், ஸ்டாலினுக்கு நம்பகத் தன்மை ஏற்படுத்தவும் அவர் இப்படி கூறியிருக்கிறார். சிறிது நாட்கள் கழித்து, ‘நான் முதல்வர் பதவியில் இருந்தும், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகமாட்டேன்என அவரே அறிக்கை வெளியிட்டு அந்தர் பல்டி அடிப்பார். இது அரசியலில் அவருக்கு கை வந்த கலை’’
‘‘தி.மு.க. ஆட்சிக்கு எதிராக வரும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா?’’
‘‘ரஜினிகாந்த் சொந்தக் குரலில் பேசக்கூடியவர்; டப்பிங் வாய்ஸ் அவருக்கு தேவையில்லை. எனவே அவருக்கு நான் டப்பிங் செய்ய மாட்டேன்.’’
‘‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழக நிலவரங்களை மாற்ற முடியுமா?’’
 ‘‘நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கித் தவித்தபோது தனியாருக்குச் சென்ற பணத்தை அரசு கஜானாவுக்கு கொண்டுவந்தவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த பணத்தை வைத்துதான் இலவச திட்டங்களை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார். என்வே அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் படிந்துள்ள தமிழகத்தின் அனைத்து நிர்வாகத்தையும் மாற்ற முடியும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்.’’

நன்றி;சூரியகதிர்.
கு.கணேஷ்குமார்