Sunday, September 25, 2011

வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை' என்ற அமைப்பு ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் ., விழாவை நடத்தி வருகிறது. மேலும் 2009ம் ஆண்டு முதல் அரசின் அனுமதி பெற்று எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படுகிறது. 

இந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., விழா 2011, செயிண்ட் டெனிஸ் நகரில் செப்டம்பர் 17ம் தேதியன்று பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்க, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.தசரதன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் முன்னிலை வகிக்க, எம்.ஜி.ஆர்., பேரவை செயலாளர் ஆனந்த ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயிண்ட் டெனிஸ் துணை மேயர் ஹென்னி சாரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, 

சென்னையிலிருந்து நடிகர் மயில்சாமி மற்றும் 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர்.

கவிசித்தர் கண கபிலனாரின் கவியுரை, கோதண்டம் சாரா மற்றும் சாரநாயகி ஆகியோரின் பரதநாட்டியம், பிருந்தா மற்றும் மானுஷாவின் வீணை இசையில் எம்.ஜி.ஆர்., பாடல்கள், சரண் மற்றும் சுகன்யாவின் கீபோர்டு இசை, எம்.ஜி.ஆர்., பாடல்களுக்கு நடனமாடிய பாலாஜி மற்றும் திவ்ய பாரதியின் நடனம், எம்.ஜி.ஆர்., பாடல்கள் பாடிய பார்வையாளர்கள் சிலர், 

எம்.ஜி.ஆர்., பட பாடல்களில் காதல் பாடலே தன்னைக் கவர்ந்தது என்று பிரபல இலக்கிய சொழ்பொழிவாளர் வினோதினி சண்முகநாதனின் உரை, தாயை போற்றும் பாடல்களே தன்னை கவர்ந்தது என்று பவானி ஜெயபாலின் உரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்த விழாவினை ‌ஜெகதீஸ்வரி செல்வமணி, பொன்னரசுடன் தொகுத்து வழங்கி பாடலொன்று பாடினார். 

அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையை 'இதயக்கனி' எஸ்.விஜயன் வெளியிட, நடிகர் மயில்சாமி பெற்றுக் கொண்டு இருவரும் சிறப்புரையாற்றினார். விழாவில் இதயக்கனி விஜயனின் எம்.ஜி.ஆர்., புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய சால்வை, கறுப்புக் கண்ணாடி ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் முகமத் முஜாவித் நன்றியுரை வழங்கினார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை சார்பில் அதன் தலைவர் முருகு பத்மநாபனுடன் இணைந்து தட்சிணாமூர்த்தி, அன்பழகன், கோபால கிருஷ்ணன், ராமமூர்த்தி, மதிவாணன், ரமேஷ், தர்மதேவன், சத்யமூர்த்தி, குமாரராஜா, பாலகந்தன், அருண்குமார், ராஜாராம், பாண்டியராஜன், கீதா, கலைவாணி, பூங்குழலி, சத்யவாணி, விஜயா, பெரியநாயகி ஆகியோர் கவனித்தனர்.
நன்றி:தினமலர்

Wednesday, September 14, 2011

பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை

 மாண்புமிகு புரட்சித்தலைவி தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவரின் 103-வது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னாள்.

மக்கள் மனதில் பதியும் வண்ணம் ஆழமான கருத்துகளைத் தந்து, தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. இவரின் கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும், வாழ்வில் வளம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தன.

தன்னுடைய பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த அண்ணா அவர்களுடைய பேச்சில், மெல்லிய பூங்காற்று போன்ற இனிய நடையுண்டு; ஆற்றொழுக்கு போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் என பொழியும் சொல்மாரி உண்டு; ஆழம் மிக்க கருத்துகள் உண்டு. இலக்கிய தமிழும், அடுக்கு நடையும், எதுகை, மோனை நயங்களும் அவரது பேச்சில் துள்ளி விளையாடும். அண்ணாவின் கவிதைகள் கற்பவரின் நெஞ்சை கவர்பவையாக இருந்தன.

தன்னுடைய நேர்மை திறத்தாலும், நெஞ்சுறுதியாலும், கொள்கை உரத்தாலும் தென்னாட்டு காந்தி எனும் சிறப்பினைப் பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா.

தமிழினப் பாதுகாவலராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழினத்தை தலை நிமிரச் செய்த அண்ணா மறைவிற்குப் பிறகு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கழகமே குடும்பம் என்று இருந்த திமுகவில், தன் குடும்ப உறுப்பினர்களை புகுத்தி, குடும்பமே கழகம் என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி.

2011-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், என் மீதும், அதிமுக மீதும் நம்பிக்கை வைத்து, ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்யும் வகையில் மக்களாட்சியை மீண்டும் மலரச் செய்யும் வண்ணம், எனது தலைமையிலான அனைத்திந்திய அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எனது தலைமையிலான அதிமுக அரசு, விலையில்லா அரிசி, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன் 50,000/- ரூபாய் உதவித் தொகை; மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மீனவர்களின் உதவித் தொகை இரட்டிப்பு; சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க ஆணை; தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க தனித் துறை; ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி; விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்; குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அண்ணா பிறந்த நாளன்று, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி; வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை என பல்வேறு நலத் திட்டங்களை நான் துவக்கி வைக்க இருக்கிறேன்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என இந்த நன்னாளில் கேட்டுக் கொள்வதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் வண்ணம், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களிலும் அனைத்திந்திய அதிமுக வெற்றி பெற, அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் திறம்பட சுற்றிச் சுழன்று களப் பணியாற்றி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்