Sunday, July 10, 2011

அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம்

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கலை வாணன். பத்திரிகையை வீடு, வீடாக போடும் பேப்பர் பையனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்; இன்றைக்கு, சில வாரப் பத்திரிகைகளின் முகவராகவும், விற்பனை யாளராகவும் செயல்படுகிறார். தற்போது இவருக்கு, ஐம்பது வயதாகிறது.
இவர், எம்.ஜி.ஆரை சிறுவயதில், மூன்று முறை தூரத்தில் இருந்து பார்த்துள்ளார். பார்த்தது முதலே அவர் மீது இனம் புரியாத பாசம்; அந்த பாசம் நாளடைவில் பக்தியாக மலர்ந்தது.

தன் சொந்த செலவில் எம்.ஜி.ஆர்., படம் போட்ட சாவிக் கொத்து, பிளாஸ்டிக் ஸ்டிக்கர் அடித்து, பார்ப்பவர்களிடம் கொடுத்து வந்தார். இந்நிலை யில், இவருக்கு திருமணம் நடந்தது. "எம்.ஜி.ஆர்., துணை ' என்று போட்டே பத்திரிகை அடித்தார்.

மனைவியாக வந்த சாந்தி இதைப்பற்றி கேட்க, அவரிடம், இவர் எம்.ஜி.ஆர்., புகழ் பாட, கொஞ்ச நாளில் அவரும் எம்.ஜி.ஆர்., பக்தராகி விட்டார்.
பிறகு, இருவரும் சேர்ந்து பேசும் போது சாவிக் கொத்து, "ஸ்டிக்கர்' என்று செலவிடும் பணத்தை சேர்த்து வைத்து, நிரந்தரமாக ஏதாவது செய்யலாமே என்று யோசித்த போதுதான், எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது.

"இந்த ஐடியா சரிதானா?' என்று, எம்.ஜி.ஆரிடம் பழகியவர்கள் - பழகாதவர்கள், அரசியலில் இருப்பவர்கள் - இல்லாதவர்கள், திரைத் துறையை சார்ந்தவர்கள் என்று பலரிடமும் கருத்து கேட்டார் கலைவாணன். ஒருவர் கூட நீ செய்வது தப்பான செயல் என்றோ, முட்டாள்தனமான செயல் என்றோ சொல்லவில்லை. அவர் இறந்து இவ்வளவு வருடங்களான பிறகும், அவர் மீது மக்கள் இவ்வளவு அபிமானம் வைத்துள்ளனர் என்றால், அவர் கோவில் கட்டி கும்பிட வேண்டியவர்தான் என்ற தன் எண்ணத்தை உறுதி செய்தார்.

மேலும், எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு போய் இருக்கிறார். அவர் வாழ்ந்த வீட்டை பார்த்ததும், மூன்று முறை முதல்வராக இருந்தவர், எவ்வளவு எளிமையாக வாழ்ந்து இருக்கிறார் என்று எண்ணியவர், கோவில் கட்டும் தன் எண்ணத்தை செயல்படுத்த துவங்கினார்.

தனக்கு வரும் வருமானத்தில், சிறிய வாடகை வீட்டில்தான் இன்றைக்கும் வசிக்கிறார் கலைவாணன்; ஆனால், எம்.ஜி.ஆருக்கு சொந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தன் சேமிப்பு, மனைவியின் நகை என்று அனைத்தையும் விற்று, தேறிய, மூன்று லட்ச ரூபாய் பணத்தை வைத்து, சென்னை முழுவதும் சுற்றியும் அதற்கான இடம் கிடைக்காததால் கொஞ்சம், கொஞ்சமாய் நகர்ந்து கடைசியில் திருநின்றவூர், நத்தம்மேட்டில், முக்கால் கிரவுண்டு வாங்கிப் போட்டார்.

பிறகு நல்ல நாள் பார்த்து, கோவிலுக்கான பூமி பூஜையும் போட்டார். இவரது இந்த முயற்சியை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., பக்தர்கள், பல பகுதிகளிலும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.

மிகவும் உணர்வுபூர்வமாக நடந்த இந்த விழாவின் நிறைவாக, அப்போதே கொஞ்சம் தொகை வசூலாக, கோவில் கட்டும் பணி துவங்கியது.
இப்படி கிடைத்த பணத்தை போட்டு, ஏழு மாதமாக கட்டியதில் இப்போது அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம் என்ற பெயர் வளைவின் கீழ், இரு குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்., சத்துணவு சாப்பிடும் படம் இடம் பெற்றுள்ளது. அதற்கு கீழ், வேட்டைக்காரன் படத்தில் இடம் பெறும், 

"பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரல்லவா, பிறர் தேவை அறிந்து கொண்டு, வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா...' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.

கோவிலினுள் முன் மண்டபம், அதை தாண்டியதும் வரக்கூடிய கருவறையில், ஆறடி உயரத்திற்கு எம்.ஜி.ஆர்., கையை உயர்த்தி அருள்பாலிப்பது போன்ற பளிங்கு சிலை இடம் பெறுகிறது. அதற்கு முன்பாக அபிஷேகத்திற்காக, இரண்டு அடி உயரத்தில் கிரானைட் கல்லால் ஆன உற்சவர் சிலை அமைய இருக்கிறது.

இரண்டு சிலைகளும் ராஜஸ்தானில் தயாராகி வருகிறது.
சிலைகள் வந்ததும் அதை, 48 நாள் பல்வேறு பூஜைப் பொருட்களில் வைத்திருக்க வேண்டும். இந்த நாட்களில் கோவிலுக்கு, "பெயின்டிங்' போன்ற விட்டுப் போன வேலைகள் செய்து முடிக்கப்படும்.

இது எல்லாம் முடிந்து, ஆகஸ்ட் மாதத்தில் எம்.ஜி.ஆர்., கோவில், அவரது பக்தர்களுக்காக திறந்து விடப்படும். தினமும் இரு வேளை, அர்ச்சகரை வைத்து பூஜை நடைபெற இருக்கிறது.

"இன்னும் கொஞ்ச நாள்தான் எனக்கு இந்த சென்னை வாழ்க்கை. பிறகு நானும், என் மனைவியும் எம்.ஜி.ஆர்., கோவிலில் சேவை செய்ய எங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோம்...' என்கிறார் கலைவாணன்.

இந்த கோவில் கட்டுவதற்காக இதுவரை யாரிடமும் இவர் நன்கொடை கேட்டது இல்லை; ஆனால், எம்.ஜி.ஆர்., பக்தர்கள் மனமுவந்து எவ்வளவு கொடுத்தாலும் இதயப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்.

எம்.ஜி.ஆருடன் பழகி, அவரால் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பயன் பெற்றவர்கள் நிறைய பேர் இருந்தாலும், தூரத்தில் இருந்து பார்த்தே பக்தி கொண்ட கலைவாணனுக்கு மட்டும்தான் கோவில் கட்ட வேண்டும், அவரை கற்பூரம் காட்டி கும்பிட வேண்டும் என்று தோன்றி இருக்கிறது.
இத்தனைக்கும் கலைவாணன் மிகச் சாதாரணமானவர்தான். ஆனால், இப்படி ஒரு அசாதாரணமான வேலையை செய்து வருகிறார். எப்படி இது சாத்தியம் என்ற கேள்விக்கு, "நினைப்பது மட்டுமே நான், நடத்திக் கொடுப்பது தெய்வமான எம்.ஜி.ஆர்...' என்கிறார் கும்பிட்டபடி. 
இவரது மொபைல் எண்: 98408 95507.  
நன்றி.தினமலர்