Saturday, December 31, 2011

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடுமையான எச்சரிக்கை.

செய்த தருமம் தலை காக்கும். 
தக்க சமயத்தில் உயிர் காக்கும். 
கூட இருந்தே குழி பறித்தாலும்  . 
என்ற பாடல் வரிகளுக்கேற்ப 
இன்று நாடு  காக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.


பொதுக்குழுவின் இறுதியில் அவர் பேசியதாவது: 

ஒரு முறை, மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆண்டவனிடம் மனு கொடுத்தனவாம். அதில், "இறைவா! எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கும் கோடரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே' என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம். "கோடரி தயாரிப்பதை நிறுத்தச் சொல்வதற்கு முன், நீங்கள், அந்தக் கோடரிகளுக்கு கைப்பிடி ஆவதை நிறுத்துங்கள். உங்களிடமிருந்து தானே கோடரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன' என்றபோது, தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர் தர வராது. 

அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கின்றனர்; குற்றம் புரிகின்றனர். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் போது, 

ஒரு சிலர், "சரி! இனி நமக்கு அரசியல் வேண்டாம் என, சிலர் முடிவெடுப்பர். இன்னும் சிலர், "வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம்' என முடிவெடுப்பர். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கிற வரை வாழ்ந்தாக வேண்டும்.


இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு,

"நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்களும் உண்டு. 

அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா,   பேசினார்.

தொண்டர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாகவும், மக்களிடம் நம்பிக்கை பெற கூடியதாகவும்  சந்தேகங்களை  போக்கியிருக்கிறது 

 புத்தாண்டு-2012 வாழ்த்துக்கள்.

Saturday, December 24, 2011

இதய தெய்வம் M.G.R. 24 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. 

அவரது 24-வது ஆண்டு நினைவு நாள் 24.12.11


இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணம் ஆகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும். 
                                                         M.G.R.

Monday, December 19, 2011

ஒரு தவறு செய்தால் அது சசி&கோ என்றாலும் விடமாட்டேன்.

அம்மா அவர்கள் மிக மிகச் சரியான முடிவு எடுத்து இருக்கின்றார்கள். தாமதம் இல்லாமல் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். இதன் மூலம் அ.தி. மு. கவை பிடித்து இருந்த சனி விலகியது என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இனி அ.தி.மு.க மிக்கப் பலம் வாய்ந்த தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். கட்சியில் எத்தகைய உயர் மட்டத்தில் இருந்தாலும், தனக்கோ கட்சிக்கோ அவர்களால் இடர் வரும் என்று தெரிந்தால் கட்சியில் இருந்தே விலக்க தயங்க மாட்டார்.நல்ல துணிச்சலான முடிவு ஆனால் மிகவும் தாமதமாக எடுத்த முடிவு

இவர்கள்தான்(சசி&கோ) கட்சிக்கு கெட்ட பெயர்கள் வர காரணமாக இருந்தவர்கள். இப்போதுதான் ADMK உண்மையான MGR அவர்களின் உண்மையான கட்சி, அவரது மறைவு தினத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி என்று சொல்லலாம், துணிந்து துணிவோடு மக்களுக்கு நல்லது யார் செய்தாலும், அது கடவுளுக்கு செய்யும் காரியமாகும் ,

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.என்ற புரட்சித்தலைவர் பாடல் வரிக்கு சரியான சாட்சி இந்த சசி&கோ நீக்கம்.

Sunday, November 20, 2011

பஸ் கட்டணம் உயர்வு,பால்விலை உயர்வு.விஜயகாந்த் எதிர்ப்பு ஏன்?.

ஜெயலலிதா துக்ளக் ஆட்சி நடத்துகிறாராம்!! அன்று ஆமாம் சாமி போட்ட இந்த விஜயகாந்த் இன்று உள்ளாட்சியில் தோல்வி மண்ணை கவ்வ வைத்ததால் போராட்டம் நடத்த போகிறாராம் இது பச்சோந்தியான வேலை இல்லையா,  

ஆசிரியர்கள் நேரத்திற்கு வந்து வேலை பார்!! உன்னுடைய வருகை பதிவை ஒழுங்காக  தாருங்கள் என்றால் துக்ளக் ஆட்சியா!!

தி.நகர் வரம்பு மீறி கட்டிய வணிக கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

மதுரை கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

தனியாருக்கு கொடுக்கும் எழுநூறு கோடி ரூபாய் தடுத்து அதனை அரசு மருத்துவமனை சரி படுத்தி இருக்கும் சேவைகளை நவீன படுத்துவது துக்ளக் ஆட்சியா!!

பலான படங்கள் கூட வரி விலக்கு என்று அனுபவித்ததை தடை செய்தது துக்ளக் ஆட்சியா

நில விற்ப்பனையில் குறைந்த விலை காட்டி ஸ்டாம்ப் வரி குறைவாக அரசிற்கு கட்டியதை தடுத்தது துக்ளக் ஆட்சியா

வாரம் வாரம் அரசிற்கு சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடத்தாமல் இருப்பது துக்ளக் ஆட்சியா  

இலவச பொருட்களை அரசு செலவு செய்து ஒவ்வொரு கவுன்சிலரும் கொடுத்தது தடுத்தது துக்ளக் ஆட்சியா!!

திமுக ஆட்சியில் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக இருநூறு சதவிதம் ஏற்றினார்கள்!! அதனை மக்களுக்கு தெரியுமாறு வெளிப்படையாக ஐம்பது சதவிதம் ஏற்றினால் துகளக் ஆட்சியா!!

அரிசி கடத்தலை ஓரளவிற்கு தடுத்து!! லாரி டிரைவர் பிடித்து போட்டு கணக்கு காட்டியதை மாற்றி லாரி உரிமையாளர் மீதும் குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

மணல்கட்த்தல் மாபியா வை தடுத்து குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

கந்து வட்டி வாங்குவோர் மீது குண்டாஸ் சட்டத்தை புதுப்பித்தது துக்ளக் ஆட்சியா!!

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயபடுதுவது துக்ளக் ஆட்சியா!!

ஏழை மக்கள் பிறர் கை ஏந்தி வாழும் நிலை மாற வேண்டும் என்ற ஓர் அற்புதமான எண்ணத்தில் இலவச மாடு , ஆடு திட்டம் துக்ளக் ஆட்சியா!!

எத்தனையோ ஏழை மாணவர்கள் படிப்பினை முடித்து தொழில் சார்ந்த அனுபவத்தை படிக்காமல் வேலைக்காகக் திரிந்தவர்களின் நிலை மாற்ற இலவச கணினி கொடுத்தது துக்ளக் ஆட்சியா!!

கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் மட்டும் போன கேபிள் வருமானத்தை அரசிற்கு திருப்பியது துக்ளக் ஆட்சியா

முதல்வன் படத்தில் இது மாதிரி காட்சி வந்தால் ரசித்து இது மாதிரி நடக்காதா என்று சொல்கிறோம்!!

இந்தியன் படத்தில் வந்தால்!! நடக்காதா என்று ஏங்குகிறோம்!!

ஆனால் நிஜத்தில் அது நடக்கிறது!

Monday, October 24, 2011

பாசிச, ஜனநாயக விரோதப் போக்கு: மத்திய அரசு மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சரமாரி குற்றச்சாட்டு


காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இதேபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட அவர்
, மாநில அரசின் நிர்வாகத்தில் அதிக அளவில் குறுக்கிடுவதின் மூலம் அதனை ஒரு நகராட்சி அளவுக்கு கீழே தள்ள மத்திய அரசு முயல்கிறது என்றும் சாடினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய
வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதில், தமிழக முதல்வரின் உரையை வாசித்தார். அதன் விவரம்:

'12-
வது ஐந்தாண்டு திட்டத்தை விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக இந்த 56-வது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக நான் அறிகிறேன். 

இந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஒரு சடங்குக்காக
கூட்டப்படுகிறதேயன்றி இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை என்ற எனது கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளை பழிவாங்குவதற்கு மத்திய அரசு தீர்மானித்திருக்கிறதோ என்று கருத வேண்டியிருக்கிறது. 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ளவர்களைப்போல காங்கிரஸ் அல்லாத மாநில அரசு
ஆளும் மாநிலங்களில் உள்ள மக்களும் இந்திய குடிமக்கள்தான் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

மாநிலத்தின் உண்மையான தேவைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. சிறப்பு
நிதி வழங்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆளும் மேற்கு வங்கத்துக்கு சிறப்பு சலுகை திட்டமே அளிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் மீது மத்திய அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.
அண்மைக்காலமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் பாசிச மற்றும் ஜனநாயக விரோதப் போக்குடன் உள்ளது.

வகுப்பு கலவரம் தடுப்பு என்ற போர்வையில் மத்திய அரசு கொண்டு வர
உத்தேசித்துள்ள திட்டம் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எந்த நேரத்திலும் மாநில அரசை பதவி நீக்கம் செய்யலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது.

மாநில அரசுகளின் முக்கிய நிதி ஆதாரமாக உள்ள வாட் வரி விதிப்பை மத்திய அரசு
எடுத்துக்கொள்ள இருக்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரும் வரி இழப்பு ஏற்படும். இதனால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கும். எனவே தான் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொழில் கல்விக்கான நுழைவு தேர்வு விஷயத்தில் மாநிலங்களில் நிலவும்
நிலைமையையோ, மாநில அரசுகளின் கருத்துக்களையோ மத்திய அரசு பொருட்படுத்துவதில்லை. கல்வித்துறையில் அடிக்கடி மத்திய அரசு தலையிடுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி
தாக்கப்படும் சம்பவத்தை நமது நாட்டுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவில்லை. இது, தமிழகத்தை மட்டும் பாதிக்கும் பிரச்னை என்பது போல மத்திய அரசு கருதுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் உயிர்கள் மத்திய அரசுக்கு மதிப்பற்றவையாக
தோன்றுகின்றன. அவர்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதில் எந்தவித பயனும் ஏற்படாது என்று நான் அஞ்சுகிறேன்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில்
11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வளர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது. 9 சதவீத வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் முதல் 4 ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியைத்தான் எட்ட முடியும்.

விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் முதல்
4 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அண்மையில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள எங்களது அரசு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 10 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது. அதனை எட்டும் வகையில் எங்கள் நடவடிக்கைகள் அமையும். 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள்
எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. உணவு மற்றும் எரிபொருள் துறையில் விலைவாசி தொடர்ந்து  உயர்ந்து வருவதால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக பதிலாக மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை அடிக்கடி உயர்த்தியதால் மேலும் விலைவாசி உயர்வதற்கான  சூழலை உருவாக்கி இருக்கிறது. 

எரிபொருளின் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டுபோனால் எப்படி பணவீக்கத்தை
குறைக்க முடியும். ஆனால், விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தங்கள் வரிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆலோசனை கூற தவறுவதில்லை.

மாநில அரசுகள்தான் மக்களுடன் நெருக்கமானவர்கள். எனவே வளர்ச்சி திட்டங்களில்
மாநில அரசுகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாமல் மாநில அரசுகளை துணை அமைப்புகள் போல நடத்துகிறது. நிதர்சன உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திட்ட செயலாக்கம் இல்லை.

ராஜீவ்காந்தி கிராம விடியூட்டி கரண் யோஜனா திட்டம்
, பிரதம மந்திரி கிராம சாதக் யோஜனா போன்ற திட்டங்களின் நிதி உதவி மாநில அரசுக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசை பொறுத்தவரை அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்கியிருக்கிறது.

ராஷ்ட்ரிய ஸ்வஸ்தி பீமயோஜனா மற்றும் இந்திரா காந்தி தாய்மை பேறு
நலத்திட்டம் ஆகியவை சிறிய பகுதிகளில் நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசு திட்டங்களுடன் சேர்த்து இதை செயல்படுத்தினால் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். மேலும் பல்வேறு அரசின் திட்டங்களின் நிதி அந்த திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளுக்கு நேரடியாக அந்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இது திட்டமிட்டே மாநில அரசுகளை புறக்கணிப்பதுடன் ஜனநாயக அதிகார பரவலுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

மாநில அரசுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து மாநில பட்ஜெட் மூலம் அவற்றை செயல்படுத்துவதே சரியான முறையாக இருக்கும்.
 

தமிழகத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழ்நாடு
2025 தொலைநோக்கு என்ற திட்டத்தை எனது அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பொது, தனியார்  பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இதற்கான தெளிவான கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

சூரிய எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டம் சூரிய சக்தி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காலம் வர வேண்டும்.'

நிதியமைச்சர் வாசித்த உரையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கூறியிருந்தார்.

Saturday, October 22, 2011

தேர்தல்முடிவுகளே சாட்சி. புரட்சித்தலைவிஅறிக்கை.

 
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்வெற்றியைத் தந்த 
மக்களுக்கு நன்றிதெரிவித்து கழகப் பொதுச்செயலாளர்  
தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 
அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த எனதருமை வாக்காளப்பெருமக்களே!
நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி மேற்குசட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும்,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் நீங்கள் அளித்த தீர்ப்புகளுக்குமுதலில் என்னுடைய இதயம் கனிந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான்
உறுதிபட நம்பினேன். என்னுடைய
நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது.

உங்களுடைய மகத்தான தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது.எனவே, அனைவருக்கும் மிகுந்த மன நெகிழ்ச்சியோடு, அன்புப் பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன்.

எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள்,கடன் சுமைகள் என்று அனைத்து முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னிடம் ஐந்து மாதங்களுக்குமுன்னர் அளித்தீர்கள். இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல்முடிவுகளே சாட்சி.

என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து
கொண்டிருக்கும்.தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக,
வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான
தமிழகம் காண்போம் என்றும்,
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை ஆக்குவோம்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கூறியுள்ளார்கள்.

Sunday, September 25, 2011

வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை' என்ற அமைப்பு ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் ., விழாவை நடத்தி வருகிறது. மேலும் 2009ம் ஆண்டு முதல் அரசின் அனுமதி பெற்று எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படுகிறது. 

இந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., விழா 2011, செயிண்ட் டெனிஸ் நகரில் செப்டம்பர் 17ம் தேதியன்று பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்க, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் பா.தசரதன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் முன்னிலை வகிக்க, எம்.ஜி.ஆர்., பேரவை செயலாளர் ஆனந்த ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயிண்ட் டெனிஸ் துணை மேயர் ஹென்னி சாரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, 

சென்னையிலிருந்து நடிகர் மயில்சாமி மற்றும் 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர்.

கவிசித்தர் கண கபிலனாரின் கவியுரை, கோதண்டம் சாரா மற்றும் சாரநாயகி ஆகியோரின் பரதநாட்டியம், பிருந்தா மற்றும் மானுஷாவின் வீணை இசையில் எம்.ஜி.ஆர்., பாடல்கள், சரண் மற்றும் சுகன்யாவின் கீபோர்டு இசை, எம்.ஜி.ஆர்., பாடல்களுக்கு நடனமாடிய பாலாஜி மற்றும் திவ்ய பாரதியின் நடனம், எம்.ஜி.ஆர்., பாடல்கள் பாடிய பார்வையாளர்கள் சிலர், 

எம்.ஜி.ஆர்., பட பாடல்களில் காதல் பாடலே தன்னைக் கவர்ந்தது என்று பிரபல இலக்கிய சொழ்பொழிவாளர் வினோதினி சண்முகநாதனின் உரை, தாயை போற்றும் பாடல்களே தன்னை கவர்ந்தது என்று பவானி ஜெயபாலின் உரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்த விழாவினை ‌ஜெகதீஸ்வரி செல்வமணி, பொன்னரசுடன் தொகுத்து வழங்கி பாடலொன்று பாடினார். 

அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையை 'இதயக்கனி' எஸ்.விஜயன் வெளியிட, நடிகர் மயில்சாமி பெற்றுக் கொண்டு இருவரும் சிறப்புரையாற்றினார். விழாவில் இதயக்கனி விஜயனின் எம்.ஜி.ஆர்., புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., பயன்படுத்திய சால்வை, கறுப்புக் கண்ணாடி ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் முகமத் முஜாவித் நன்றியுரை வழங்கினார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவை சார்பில் அதன் தலைவர் முருகு பத்மநாபனுடன் இணைந்து தட்சிணாமூர்த்தி, அன்பழகன், கோபால கிருஷ்ணன், ராமமூர்த்தி, மதிவாணன், ரமேஷ், தர்மதேவன், சத்யமூர்த்தி, குமாரராஜா, பாலகந்தன், அருண்குமார், ராஜாராம், பாண்டியராஜன், கீதா, கலைவாணி, பூங்குழலி, சத்யவாணி, விஜயா, பெரியநாயகி ஆகியோர் கவனித்தனர்.
நன்றி:தினமலர்

Wednesday, September 14, 2011

பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை

 மாண்புமிகு புரட்சித்தலைவி தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவரின் 103-வது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னாள்.

மக்கள் மனதில் பதியும் வண்ணம் ஆழமான கருத்துகளைத் தந்து, தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. இவரின் கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும், வாழ்வில் வளம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தன.

தன்னுடைய பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த அண்ணா அவர்களுடைய பேச்சில், மெல்லிய பூங்காற்று போன்ற இனிய நடையுண்டு; ஆற்றொழுக்கு போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் என பொழியும் சொல்மாரி உண்டு; ஆழம் மிக்க கருத்துகள் உண்டு. இலக்கிய தமிழும், அடுக்கு நடையும், எதுகை, மோனை நயங்களும் அவரது பேச்சில் துள்ளி விளையாடும். அண்ணாவின் கவிதைகள் கற்பவரின் நெஞ்சை கவர்பவையாக இருந்தன.

தன்னுடைய நேர்மை திறத்தாலும், நெஞ்சுறுதியாலும், கொள்கை உரத்தாலும் தென்னாட்டு காந்தி எனும் சிறப்பினைப் பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா.

தமிழினப் பாதுகாவலராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழினத்தை தலை நிமிரச் செய்த அண்ணா மறைவிற்குப் பிறகு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கழகமே குடும்பம் என்று இருந்த திமுகவில், தன் குடும்ப உறுப்பினர்களை புகுத்தி, குடும்பமே கழகம் என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி.

2011-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், என் மீதும், அதிமுக மீதும் நம்பிக்கை வைத்து, ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்யும் வகையில் மக்களாட்சியை மீண்டும் மலரச் செய்யும் வண்ணம், எனது தலைமையிலான அனைத்திந்திய அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எனது தலைமையிலான அதிமுக அரசு, விலையில்லா அரிசி, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன் 50,000/- ரூபாய் உதவித் தொகை; மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மீனவர்களின் உதவித் தொகை இரட்டிப்பு; சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க ஆணை; தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க தனித் துறை; ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி; விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்; குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அண்ணா பிறந்த நாளன்று, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி; வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை என பல்வேறு நலத் திட்டங்களை நான் துவக்கி வைக்க இருக்கிறேன்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என இந்த நன்னாளில் கேட்டுக் கொள்வதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் வண்ணம், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களிலும் அனைத்திந்திய அதிமுக வெற்றி பெற, அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் திறம்பட சுற்றிச் சுழன்று களப் பணியாற்றி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

Monday, August 29, 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை:
"1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று  மேல் முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.  

17.10.1999
அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள், தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் - இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார். தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

மூவர் மனுவை நிராகரிக்க திமுக அரசு பரிந்துரை..

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

"
தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப் பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதலமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று  ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று திரு கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

எனக்கு அதிகாரம் இல்லை...

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை  ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.

உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.  இவர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்கள் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப் படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின்  கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்த வித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-
     
     2.  The Government of India, on an examination of the matter, and after taking all relevant constitutional aspects into view, direct in terms of article 257(1) of the Constitution of India that in cases of death sentences where a petition for grant of pardon etc. has earlier been rejected by the President of India in exercise of his powers under article 72 of the Constitution of India, it would not be open for the Government of a State to seek to exercise similar powers under article 161 in respect of the same case. However, if there is a change of circumstances or if any new material is available, the condemned person himself or any one on his behalf may make a fresh application to the President for reconsideration of the earlier order.  Once the President has rejected a mercy petition, all future applications in this behalf should be addressed to and would be dealt with by the President of India.”

அதாவது, இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்வர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.  

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.