Monday, August 29, 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அளித்த அறிக்கை:
"1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று  மேல் முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.  

17.10.1999
அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள், தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் - இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார். தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

மூவர் மனுவை நிராகரிக்க திமுக அரசு பரிந்துரை..

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

"
தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப் பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை  தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதலமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று  ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று திரு கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

எனக்கு அதிகாரம் இல்லை...

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை  ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.

உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.  இவர்களுக்கு மேதகு ஆளுநர் அவர்கள் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப் படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின்  கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்த வித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-
     
     2.  The Government of India, on an examination of the matter, and after taking all relevant constitutional aspects into view, direct in terms of article 257(1) of the Constitution of India that in cases of death sentences where a petition for grant of pardon etc. has earlier been rejected by the President of India in exercise of his powers under article 72 of the Constitution of India, it would not be open for the Government of a State to seek to exercise similar powers under article 161 in respect of the same case. However, if there is a change of circumstances or if any new material is available, the condemned person himself or any one on his behalf may make a fresh application to the President for reconsideration of the earlier order.  Once the President has rejected a mercy petition, all future applications in this behalf should be addressed to and would be dealt with by the President of India.”

அதாவது, இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்வர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.  

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment