Wednesday, September 14, 2011

பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை

 மாண்புமிகு புரட்சித்தலைவி தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவரின் 103-வது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னாள்.

மக்கள் மனதில் பதியும் வண்ணம் ஆழமான கருத்துகளைத் தந்து, தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. இவரின் கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும், வாழ்வில் வளம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தன.

தன்னுடைய பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த அண்ணா அவர்களுடைய பேச்சில், மெல்லிய பூங்காற்று போன்ற இனிய நடையுண்டு; ஆற்றொழுக்கு போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் என பொழியும் சொல்மாரி உண்டு; ஆழம் மிக்க கருத்துகள் உண்டு. இலக்கிய தமிழும், அடுக்கு நடையும், எதுகை, மோனை நயங்களும் அவரது பேச்சில் துள்ளி விளையாடும். அண்ணாவின் கவிதைகள் கற்பவரின் நெஞ்சை கவர்பவையாக இருந்தன.

தன்னுடைய நேர்மை திறத்தாலும், நெஞ்சுறுதியாலும், கொள்கை உரத்தாலும் தென்னாட்டு காந்தி எனும் சிறப்பினைப் பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பறிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா.

தமிழினப் பாதுகாவலராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழினத்தை தலை நிமிரச் செய்த அண்ணா மறைவிற்குப் பிறகு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கழகமே குடும்பம் என்று இருந்த திமுகவில், தன் குடும்ப உறுப்பினர்களை புகுத்தி, குடும்பமே கழகம் என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி.

2011-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், என் மீதும், அதிமுக மீதும் நம்பிக்கை வைத்து, ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்யும் வகையில் மக்களாட்சியை மீண்டும் மலரச் செய்யும் வண்ணம், எனது தலைமையிலான அனைத்திந்திய அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எனது தலைமையிலான அதிமுக அரசு, விலையில்லா அரிசி, அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கக் காசுடன் 50,000/- ரூபாய் உதவித் தொகை; மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மீனவர்களின் உதவித் தொகை இரட்டிப்பு; சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க ஆணை; தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க தனித் துறை; ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி; விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்; குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அண்ணா பிறந்த நாளன்று, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி; வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை என பல்வேறு நலத் திட்டங்களை நான் துவக்கி வைக்க இருக்கிறேன்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என இந்த நன்னாளில் கேட்டுக் கொள்வதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் வண்ணம், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களிலும் அனைத்திந்திய அதிமுக வெற்றி பெற, அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் திறம்பட சுற்றிச் சுழன்று களப் பணியாற்றி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment