Tuesday, May 1, 2012

அசல்கள் அடங்கிக் கிடப்பதும் நகல்கள் நாட்டாண்மை செய்வதும். புலமைப்பித்தன்


நெஞ்சமும் இல்லாமல்; நீதியும் இல்லாமல் இருக்கிறவர்கள் எல்லாம் நெஞ்சுக்கு நீதிஎன்று சுயசரிதம் எழுதிக் குவிக்கிறார்களே!

அதனால்தான் நெஞ்சத்துக்குள்ளேயே இருட்டில் கிடந்த ஒரு சிலவற்றையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைத்து எழுதுகிறேன்.

அசல்கள் அடங்கிக் கிடப்பதும் நகல்கள் நாட்டாண்மை செய்வதும் எல்லாக் காலங்களிலும் நடைபெறும் காரியம்தானே!


தமிழ் ஈழப் பிரச்னை காரணமாக என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவரும் நானும் எந்த அளவுக்கு எதிரெதிர்த் துருவங்களாக நிற்க வேண்டியிருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த மன்னாதிமன்னனை... துன்பப் படுத்த நேர்ந்த நேரங்களில் என் மனம் எப்படி வலித்தது; எப்படித் துடித்தது என்பதை எல்லாம் இன்றுபோய் நான் அவரிடமா சொல்லமுடியும்!

ஏறத்தாழ 80 ஆம் ஆண்டில் இருந்து இறுதிவரை அந்த மனிதனுக்கு நான் தீராத தொல்லைகளையே கொடுத்துவந்திருக்கிறேன்.

ஆனால் அத்தனை தொல்லைகளையும் அவர் தாங்கிக் கொண்டார். ஒரு நாள் கோபித்தார்... ஒரு நாள் சண்டை போட்டார். ஒருநாள் அந்த மனிதனே என்னை சமாதானப்படுத்தினார். அப்படிப்பட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா! எதை எதை நான் சொல்ல, எதை எதைச் சொல்லாமல் தள்ள! இந்த ஏழைப் புலவன் மீது ஏன் அவர் அத்தனை அன்பு வைத்தார்!

நான் தொல்லை தந்தும் ஏன் தாங்கிக் கொண்டார்? என்னையும் தாங்கிப் பிடித்தார். ஒரு சமயத்தில், என்னைக் கடிந்துகொண்டு அவர் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்! அவர் கேட்டார்...

‘‘உங்களது கொள்கை வெறிக்கு எல்லையே இல்லையா?’’ நான் சொன்னேன்...

‘‘பதவி வெறி இருந்தால் தவறு; பணவெறி இருந்தாலும் தவறு; கொள்கை வெறி இருந்தால் தவறா? கொள்கை வெறிக்கு என்ன உச்சவரம்பு?’’ அவர் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மிகவும் நொந்துபோய்...
  
‘‘புலவரே... நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. ஊர் உலகத்தில் அவனவன் கொள்கை பேசுகிறவன் எல்லாம் பத்து தலைமுறைக்கு, நூறு தலைமுறைக்கு சொத்து சம்பாதித்து வைத்துக் கொண்டு பேசுகிறான்! அப்படி நீங்கள் என்ன சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்? எனக்குள்ள கவலை எல்லாம் நான் உங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன் என்பதுதான்’’என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தார்.

அப்போது நெஞ்சுக்கு அந்த வலி தெரியவில்லை. எனக்காக அவரது மனம் எப்படித் தவித்தது என்பது புரியவில்லை. தான் பெற்ற பிள்ளைமீது ஒரு தந்தைக்குள்ள அக்கறையும் ஆற்றாமையும் இப்படித்தானே இருக்கும்! அந்த அக்கறையும் அந்த ஆற்றாமையும் என் மேல் தலைவனுக்கு இருந்தது.

உங்களை எப்படி நான் பாதுகாக்கப் போகிறேன்என்று இதயம் கனக்க என்னை நினைத்து கவலைப்பட்டாரே... அவருக்கும் எனக்கும் என்ன சொந்தம்? 
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்

No comments:

Post a Comment