Thursday, June 30, 2011

விசாரணை கமிஷன் என்றவுடன் மு.க. பயம், நடுக்கம்.

டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது, முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது எவ்வளவு, செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சட்டப்பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு, பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல், தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு, இது குறித்து விசாரணை உண்டா?என்றுகேள்வி வேறு.

1200 கோடி ரூபாய்க்கு விசாரணை என்றால், லட்சத்தில் உள்ள செலவிற்கு விசாரணை கமிஷன் கேட்கிறார். சம்பந்தமே இல்லாமல் உளறுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது. ஏன் இவர் இப்படி இருக்கிறார்? விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும்..... அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவற்றின் பயத்திலிருந்து நிரூபணம் ஆகிறது. நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். சமசீர் கல்வி புத்தகத்திற்கு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால், அதன் உண்மையான செலவு 80 கோடி, 200 கோடி அல்ல என்று தெரியவரும். என்னமோ இவர் அறிக்கையால் தான் அம்மா காஸ் விலை குறைத்ததாக திமுகவினர் கூறினார்கள், அப்படி என்றால், மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக ஏன் மத்திய அரசை வலியுறுத்தி விலை ஏற்றதை திரும்ப பெறவில்லை?

முன்பு வெங்காயம் விலை அதிகம் என்று மு.க.விடம் கேட்டபோது, பெரியாரிடம் போய் கேள் என்று நக்கல் செய்தார், பெட்ரோல் விலை ஏறியதை கேட்டபோது போய் மன்மோகன் சிங்கிடம் கேள் என்று சொன்னவர் தான் இந்த மு.க. இவர் சொல்லிட்டாராம், அம்மா வரியை நீக்கிவிட்டாராம்? 

ஒரு சின்ன கதை, ஒரு எறும்பு யானையின் தலையில் உட்கார்ந்து அழுத்துமாம், அந்த யானை தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சம் முழ்குமாம், உடனே கரையில் இருக்கும் எறும்புகள், யானையின் தலையில் உள்ள எறும்பை பார்த்து, அப்படி தான், விடாதே, நல்லா அழுத்து, யானை தண்ணீரில் முழ்கி சாகட்டும் என்று கூச்சல் போடுமாம். அந்த எறும்பினால் தான் யானை மூழ்கியது என்று அந்த எறும்புகள் ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவிதுகொள்ளுமாம், அது போல இருக்கிறது, நான் விட்ட அறிக்கையால் தான் வரியை குறைத்தார் என்று சொல்லுவது. கருணாநிதி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது, ஏன் விற்பனை வரியை குறைக்கவில்லை?

இருபது லட்சம் செலவு, அது மக்கள் வரி பணம், சரி, விசாரணை தேவை, செம்மொழி மாநாட்டிற்கு 500 கோடி செலவழித்தாரே, அது நம்முடைய வரி பணம் இல்லையா? கருணாநிதியின் சொந்த பணமா?2G ஊழல் காரணமாக இது நாள் வரை கருணாநிதி, திமுக உறுபினர்கள், குடும்ப உறுப்பினர்கள் டெல்லி சென்றார்களே, அது யார் பணம்? அவர் சொந்த பணமா? அம்மா ஆட்சி அமைத்து ஒரே முறை தான் டெல்லி சென்றார், அதுவும் அரசாங்க ரீதியாக சென்றார், அதற்க்கு இந்த கூப்பாடு போடுகிறீர்கள்? சரி, மன்மோகன் சிங், சென்னை வந்தால், பயணிகள் விமானத்தில் தான் வரவேண்டும் என்று கூறுவீர்களா? இல்லை வெளிநாடு செல்லும் போது பயணிகள் விமானத்தில் தான் செல்லவேண்டும் என்று கூறுவீர்களா?.  

மன்மோகன் சிங், மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தனி விமானத்தில் தான் செல்வார், அது போலவே. அம்மா ஒரு மாநில முதல்வர், அதும் வலிமையான முதல்வர், அவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி விமானத்தில் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில முதல்வர்கள் ஐந்து வருடத்தில் அரசாங்க ரீதியான பயணத்தில் இவ்வளவு பணம் செலவு செய்து கொள்ளலாம் என்று அளவு உள்ளது, அந்த பணத்தில் தான் அவர் செலவு செய்கிறார். தெரிந்தால் பேசுங்கள், சும்மா வரி பணம் வரி பணம் என்று பிதற்றாதீர்கள். எவ்வளவோ லட்சம் கோடிகள் கொள்ளையடித்தார், அது பரவாயில்லையாம், இருபது லட்சம் தான் இவருக்கு மக்களின் வரி பணமாக தெரியுதாம்....

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

Monday, June 20, 2011

தமிழீழம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு துணை நிற்போம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

சைதாப்பேட்டை
தேரடி திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற
தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன்.பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள்.இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதலமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8
கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக
நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது.புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர்.அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்த போதும் ஜெயலலிதா வற்புறுத்தினார்.இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம்.அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

 
இலங்கை தமிழர் பிரச்னையில் இன்று ஜெயலலிதா நாடகம் ஆடுவதாக கருணாநிதி கூறுகிறார்.இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் அவர் இது போன்ற ஒரு நாடகத்தை கூட அவர் நடத்திக் காட்டவில்லையே?
ஜெயலலிதாவை பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார்.தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார்.இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்போம்.


இவ்வாறு சீமான் பேசினார்.

Sunday, June 5, 2011

திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன

அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு  காரணம் என்ன
 

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:

1.
மின்வெட்டு

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

2.
விலைவாசி உயர்வு

இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.

விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

3.
குடும்பத்தினரின் ஆதிக்கம்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.

மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.

4.
திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்

அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.

5.
ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.

உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.

6. 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.

Saturday, May 21, 2011

மக்கள் ஏன் மவுன புரட்சி செய்திருக்கின்றனர்?


தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கும் என, ஏடுகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன. ஆனால், ஓட்டுப்பதிவின் போது வீசிய அமைதிப் புயல், அந்த கணிப்புக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.

மக்கள் ஏன் மவுன புரட்சி செய்திருக்கின்றனர்?இரண்டு லோக்சபா தேர்தலிலும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், தி.மு.க, தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., மிகப் பெரிய அதிர்ச்சியை சந்தித்திருக்கிறது.தி.மு.க.,வில், "தென்மண்டல அமைப்பு' என்ற பிரிவு அறிவிக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக, கருணாநிதியின் மகன் அழகிரி அறிவிக்கப்பட்டார். உண்மையிலேயே இந்த ஏற்பாட்டை, தி.மு.க., தொண்டர்கள் விரும்பவேயில்லை. ஆனால், தென்மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கு, அழகிரியின் தலைமை தேவை என்று கூறினர்.தென்மண்டலத்திற்காக, மதுரையில் தனி ராஜாங்கம் நடைபெறுகிறது என்ற தோற்றம் வலுப்பெற்று வந்தது. அதை தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ முடியவில்லை; அதன் எதிரொலியை, இந்த தேர்தலில்  பார்த்தோம். மதுரை நகரில் மட்டுமல்ல, மாவட்டத்தின், 10 தொகுதிகளிலும், தி.மு.க., தோல்வி கண்டது.

ஒரு காலத்தில், தன் கோட்டையாக இருந்த மதுரை மாநகரை, மீண்டும் அ.தி.மு.க., கைப்பற்றியிருக்கிறது.அதற்கு என்ன காரணம்?தி.மு.க, மீது மக்கள் கொண்ட கோபமா?மதுரை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிட்டார். அவர் ஒரு சாமான்ய தொண்டர். அவர் வாங்கிய ஓட்டுகள், 83 ஆயிரத்திற்கும் அதிகம். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர், செல்வந்தர் வீட்டு பிள்ளை. அவர் வாங்கிய ஓட்டுக்கள், 38 ஆயிரம் தான். எதற்காக இதை குறிப்பிடுகிறோம் என்றால், மதுரை மக்கள் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளவே!

எட்டு மாவட்டங்களை கொண்ட சோழ மண்டலத்தில், அ.தி.மு.க., 26 தொகுதிகளிலும், தே.மு.தி.க., மூன்று தொகுதிகளிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ், பா.ம.க., ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.திருவாரூர் தொகுதியில், கருணாநிதி, 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க., ஒவ்வொரு தொகுதியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடுமையான போட்டி என சொல்லப்பட்ட, ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெயலலிதா, 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பொதுவாக, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், தி.மு.க., கோட்டையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும், இதுவரை கண்டிராத அளவிற்கு, இந்த தேர்தலில் தான், தி.மு.க., இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது. அந்த அளவிற்கு, மக்கள் பல்வேறு காரணங்களால், அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்றனர். அந்த கோபத்தை, ஓட்டுச்சாவடிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கொங்கு சீமையில், 2006 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த லோக்சபா தேர்தலிலும், தி.மு.க., பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு, அந்தந்த மாவட்ட கழக தலைமைகள் மீது, மக்களும், கழக தொண்டர்களும் கொண்ட அதிருப்தி தான் காரணம்."தொகுதியில், அமைச்சர்களின் புதல்வர்கள், சிற்றரசர்களாக வலம் வருகின்றனர்' என்ற புகார்கள், அறிவாலயத்தை முற்றுகையிட்டன. நில அபகரிப்பு என்ற புகாரில், ஒரு அமைச்சர் பதவி இழந்தார்; மாவட்ட செயலர் பதவியையும் இழந்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அவர் மீண்டும் மாவட்ட செயலரானார். அதை அந்த மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

கொங்கு சீமையில், இப்படி ஒரு பக்கம் அமைப்பு ரீதியாக தி.மு.க., பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது.அந்த சீமை விவசாயத்தையும், தொழில் வளத்தையும் நம்பி இருக்கிற பூமி. நூறு நாள் வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என, விவசாயிகள் வெதும்பினர்.இதற்கு கேரளம் ஓரு தீர்வு கண்டது. நூறு நாள் வேலை திட்டத்தையும், விவசாய பணிகளையும் இணைத்தது; நூறு நாள் வேலை திட்டமும் செயல்பட்டது. அதே சமயம், விவசாய பணிகளும் இடையூறு இன்றி நடந்தன. இதற்கு, மத்திய அரசின் அனுமதி தேவை. இங்கே, அனுமதி கேட்டதோடு நிறுத்திக் கொண்டனர்; தொடர் நடவடிக்கைகள் இல்லை.கடுமையான மின்வெட்டு, கொங்கு சீமையில் கொதிகலனாக்கிவிட்டது. அதனால், சில தொழில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது; தொழிலாளர்கள் வேலை இழக்கும் அவலமும் ஏற்பட்டது. திருப்பூர் சாயப்பட்டரை பிரச்னை தீராத தலைவலி தான்.

இப்படி, பல காரணங்கள், மக்கள் நலத்திட்டங்களின் சிறப்புக்களையே சீர்குலைத்துவிட்டன.வடமாவட்டங்களில், தி.மு.க., நல்ல வெற்றியையே எதிர்பார்த்தது. தி.மு.க., கூட்டணியில், ஒரு பக்கம், பா.ம.க.,வும், இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றன. கூட்டணியின் பிரதான பங்காளியாக, காங்கிரஸ் கட்சி, காட்சி தந்தது. ஆனால், இந்த கூட்டணி, வெற்றிக்கு உதவவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., அங்கம் பெற்றது. அந்த கட்சி போட்டியிட்ட, ஏழு தொகுதிகளிலும், அதை தோற்கடித்தது தி.மு.க., தான். ஆனால், அதே பா.ம.க., சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., அணிக்கு தாவியது. வடமாவட்டங்களில், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி, அதிகபட்சம் 5 சதவீதம் தான் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. அந்த கட்சிக்கு, எந்த மாவட்டத்திலும், முறையான கட்சி கிளைகளோ, அமைப்புக்களோ இல்லை. அந்த கட்சிக்கு, 30 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கி தந்தது.அதே போல, காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகளை ஒதுக்கி தந்தது. அந்த கட்சி ஒரு, பெருங்காயம் இருந்த "டப்பா!' கோஷ்டி சண்டைகளுக்கு குறைவில்லாத ஒரு இயக்கம் அது.இப்போது, இக்கட்சிகளின் வலிமை என்னவென்று தெரிந்திருக்கிறது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த, 40 ஆண்டுகளாக, அந்த கட்சி இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க.,விற்கு, மக்கள் இப்போது பாடம் புகட்டியிருக்கின்றனர்.தி.மு.க.,வுக்கு இவ்வளவு பெரிய இழப்பை தேடி தந்தது, காங்கிரஸ் கட்சி தான். அந்த கட்சிக்கு, 60 இடங்களை ஒதுக்க தி.மு.க., முன்வந்தது. ஆனால், டில்லியில் இருந்து முதலில், 61 இடங்கள் என்றனர். அப்போது, தி.மு.க.,வின் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. 60 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கேட்கிறது. எனவே, தி.மு.க., கூட்டணியில் தொடர அதற்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என்று, உயர்மட்டக் குழு அறிவித்து, அந்த முடிவை, தி.மு.க., செயல்படுத்தியிருக்க வேண்டும். காங்கிரஸ் உறவை உதறியிருக்க வேண்டும்.

ஆனால், கருணாநிதியின், உறவினர்களான இரண்டு மத்திய அமைச்சர்கள், சோனியாவை சந்தித்தனர்; அதன் பின், காங்கிரஸ் கட்சி கொடுத்த நிர்பந்தத்தை, தி.மு.க., ஏற்றுக் கொண்டது. அதனால், தி.மு.க., டில்லி அரசியலில் சூழ்நிலைக் கைதி என்ற எண்ணம் தான் மக்களுக்கு ஏற்பட்டது. ஈழப் பிரச்னையில், காங்கிரஸ் கட்சி மீது தமிழகம் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறது என்பதை தி.மு.க., கணித்திருக்க வேண்டும். அந்த கோபம் தான், காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய செய்துள்ளது. அதன் பாதிப்பிற்கு, தி.மு.க.,வும் உள்ளானது.

இந்த தேர்தலில், விஜயகாந்தின், தே.மு.தி.க., பெற்ற வெற்றியை குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி, இம்முறை, அ.தி.மு.க., அணியில் நின்று போட்டியிட்டது. அ.தி.மு.க., வெற்றிக்கு அவர்கள் பேருதவியாக இருந்தனர். 41 இடங்களில் போட்டியிட்ட, தே.மு.தி.க., 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சியே, எதிர்க்கட்சி என்ற வரிசையில் அமருகிறது.பொதுவாக, இந்த தேர்தல் தீர்ப்பு குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் என்ன கருத்து சொல்லியிருக்கின்றனர்? "ஒரு குடும்ப ஆட்சிக்கு, மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்' என்கின்றனர்.

சோலை - அரசியல் விமர்சகர்.

Wednesday, February 2, 2011

தி.மு.கவை தோற்கடித்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்! சோ.



தி.மு.கவை தோற்கடித்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்!
சோ கணிப்பு

‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர், நடுநிலை அரசியல் விமர்சகர் மற்றும் சினிமா நடிகர் என பன்முகத்தன்மை வாய்ந்த ‘சோ’வை சந்திப்பதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது பத்திரிகை அலுவலத்துக்கு சென்றோம். சிறிது நேரத்துக்குப்பின், அலுவலக முதல் மாடியில் உள்ள அவரது பர்சனல் அறைக்குள் போனோம். சிரித்த முகத்துடன் வரவேற்றார் சோ. அமைதியாகக் காட்சி அளித்த அந்த அறையில், காஞ்சி பெரியவரின் மெகா படம் உட்பட பல சாமி படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஊதுவத்திகளால் வீசிய தெய்வீக மணத்துக்கு நடுவில், சூரிய கதிருக்காக அவர் மனம் திறந்து பேசத்துவங்கினார்.
‘‘2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எப்படி பார்க்கிறீர்கள்?’’
‘‘இந்தியாவிலேயே.. ஏன்? உலகத்திலேயே இது மிகப்பெரிய ஊழல். இதில் நிறைய ‘ஜி’க்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால், பிரதான ‘ஜி’க்கள் இருவர் தான். ஒருவர் சோனியா மற்றொருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளிவர கூட்டுக்குழு விசாரணை தேவை. இதற்கு பிரதமர் ஒத்துழைக்காததால், அவரது நேர்மையையும் இப்போது சந்தேகப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சோனியா மிகப்பெரிய உத்தமர் அல்ல. அவரது பங்கு ஸ்பெக்ட்ரமில் அதிகமாக இருக்கிறது. அதை வைத்துத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி சோனியாவை மிரட்டுகிறார்’’
‘‘வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க & காங்கிரஸ் கூட்டணி தொடருமா?’’
‘‘கண்டிப்பாகத் தொடரும். இந்த இரு கட்சியும் மத்தியில் அடித்த கொள்ளையை மறைக்க கூட்டணி தொடரும். இருவருக்கும் வேறு வழி இல்லை.’’
‘‘துணை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்களே?’’
‘‘ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் அழகிரியை சமாளிப்பதற்கே நேரம் போதவில்லை. அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? அவர் சொல்லக்கூடிய புள்ளிவிவரங்கள் தவறாக இருக்கின்றன. அழகிரியை சமாளிக்கவே அவருக்கு மூச்சு முட்டுவதாக எனக்கு தகவல்கள் வருகிறது. எனவே ஸ்டாலினை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் குடும்பப் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்’’
‘‘தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக, கூறப்படுவது உண்மையா?’’
‘‘முதல்வர் கருணாநிதி எந்த திட்டத்தைத் துவங்கினாலும் அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்வதில் கெட்டிக்காரர். அவர் செயல்படுத்திய இலவச டி.வி திட்டம் உட்பட எல்லா திட்டங்களும் தி.மு.க.வினருக்குதான் பயன் தருகின்றது. இலவசங்களை கொடுத்து மக்களை தவறான பாதைக்கு கருணாநிதி அழைத்துச் செல்கிறார். வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு நிலை கிடையாது.’’
‘‘தி.மு.க. ஆட்சியை மாற்ற என்ன வழி?’’
‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபொழுது, ‘ஜன நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திராவைத் தோற்கடிக்க வேண்டும்’ என்ற உணர்வு இருந்தது. அதே நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. தி.மு.க.வை தோற்கடித்தால்தான் தமிழகத்தையே காப்பாற்ற முடியும். அது தமிழர்கள் கையில் உள்ளது’’
‘‘அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்த என்ன செய்யலாம்?’’
‘‘அ.தி.மு.க அணியில் இப்போது உள்ள கட்சிகளே போதும் என ஜெயலலிதா நினைக்கக்கூடாது. கூட்டணியை வலுப்படுத்த விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணி அமைய வேண்டும். தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும்.’’
‘‘விஜயகாந்த் தனித்து நிற்க வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது. தி.மு.க.வை தோற்கடிக்கும் கடமையில் இருந்து அவர் தவறக் கூடாது. எனவே அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது காலத்தின் கட்டாயம்.’’
‘‘விஜயகாந்தை தனித்து நிற்க வைக்க தி.மு.க விலை பேசுகிறது என்கிறார்களே?’’
‘‘நான் அப்படி நினைக்கவில்லை. விஜயகாந்த் விலை போகிறவராக இருந்தால் அவரது திருமண மண்டபத்தை இடித்திருக்க மாட் டார்கள். ‘ரெய்டு’ என்ற பெயரில் அவருக்கு அடுக்கடுக்கான சோதனைகளை கொடுத்திருக்க மாட்டார்கள். தி.மு.க. நினைத்தால் தமிழகத்தையே விலைக்கு வாங்க முடியும். அவ்வளவு பணம் அவர்களிடம் இருக்கிறது. அதனால் தான் ஓட்டுக்கு பணம் கலாச்சாரத்தை அவர்கள் அமல்படுத்தியிருக்கிறார்கள்’’
‘‘தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது?’’
‘‘தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம். திரைப்படத்துறை முதல்வர் குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தயவு இல்லாமல் எந்த படத்தையும் திரையிட முடியாது. ரியல் எஸ்டேட் துறையையும் அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பத்திற்கு எல்லாவற்றையும் எழுதிக் கொடுக்க வேண்டியதுதான் மிச்சம்’’
‘‘ ‘முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை’ என சமீபத்தில் கருணாநிதி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?’’
‘‘அவர் அதை மக்களுக்காக சொல்லவில்லை. தனது மக்களை நினைத்து சொல்லியிருக்கிறார். அழகிரியை எச்சரிக்கை செய்யவும், ஸ்டாலினுக்கு நம்பகத் தன்மை ஏற்படுத்தவும் அவர் இப்படி கூறியிருக்கிறார். சிறிது நாட்கள் கழித்து, ‘நான் முதல்வர் பதவியில் இருந்தும், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகமாட்டேன்’ என அவரே அறிக்கை வெளியிட்டு அந்தர் பல்டி அடிப்பார். இது அரசியலில் அவருக்கு கை வந்த கலை’’
‘‘தி.மு.க. ஆட்சிக்கு எதிராக வரும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா?’’
‘‘ரஜினிகாந்த் சொந்தக் குரலில் பேசக்கூடியவர்; டப்பிங் வாய்ஸ் அவருக்கு தேவையில்லை. எனவே அவருக்கு நான் டப்பிங் செய்ய மாட்டேன்.’’
‘‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழக நிலவரங்களை மாற்ற முடியுமா?’’
 ‘‘நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கித் தவித்தபோது தனியாருக்குச் சென்ற பணத்தை அரசு கஜானாவுக்கு கொண்டுவந்தவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த பணத்தை வைத்துதான் இலவச திட்டங்களை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார். என்வே அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் படிந்துள்ள தமிழகத்தின் அனைத்து நிர்வாகத்தையும் மாற்ற முடியும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்.’’

நன்றி;சூரியகதிர்.
கு.கணேஷ்குமார்